“நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?” – யாக்கோபு 4:5
தேவனுடன் நெருங்கி இருக்க விருப்பமா? அவர் நம்மோடு நெருக்கமாக இருக்க விரும்புகிறார். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வேத வாக்கியமானது, அவர் ஆவியாய் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறாரென்றும், ஒரு வைராக்கிய வாஞ்சையோடு வரவேற்கப்பட வேண்டுமென்று விரும்புகிறாரென்றும் கூறுகிறது. எனவே எவ்வளவு நெருக்கமாக நீங்கள் இருக்க முடியும்?
தேவனுடனான நம்முடைய உறவிலே நாம் எப்போதுமே நெருங்கி செல்லலாம். உண்மையிலேயே அவருடனான நம் உறவு எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டுமென்பதை நாம் தான் தீர்மாணிக்க வேண்டும். அவர் நமக்குள்ளே வாசமாய் இருந்தாலும் கூட பரிசுத்த ஆவியானவர் நம்முடனான ஒரு உறவை வலுக்கட்டாயமாக்க மாட்டார். நாம் அவரை நம்முடைய ஜீவியத்திலே வரவேற்க வேண்டுமென்று விரும்புகிறார்.
தேவன் நம்மை ஐக்கியத்திற்கென்று சிருஷ்டித்திருக்கிறார். நம்முடனான உறவை அதிகமாக விரும்புகிறார். நம்மோடு பேச, நமக்கு செவி கொடுக்க, நமக்கு போதிக்க, நம்மை வழிநடத்த, நம் வாழ்விலே ஒரு பங்காக இருக்க ஏங்குகிறார். அதனால் நாம் தான் மேம்படுகிறோம். நாம் தேவனோடு ஐக்கியப்படும் போது புதுப்பிக்கப்படுகிறோம். பிதாவோடு நேரம் செலவிடுவதால் ஏற்படும் பலன்களுக்கு முடிவில்லை.
என் நண்பரே, பிதாவோடு ஐக்கியப்பட நேரம் செலவிட வேண்டுமென்று உங்களை வருந்திக் கேட்டுக் கொள்கிறேன். அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அவர் ‘என்னிடம் வாருங்கள்’ என்று கூப்பிடுகிறார். எனவே முன்னோக்கி சென்று உங்களுக்கென்று என்ன காத்திருக்கிறது என்பதைப் பாருங்கள்!
ஜெபம்
கர்த்தாவே, என்னோடு நீர் எப்படியாக ஐக்கியப்பட விரும்புகிறீர் என்பது ஆச்சரியதுக்குள்ளாக்குகிறது. நானும் உம்மோடு நெருக்கமாக இருக்க விரும்புகிறேன். என்னை நேசிப்பதற்காக உமக்கு நன்றி. நான் உம்மண்டை கிட்டி சேர்கையிலே நீரும் என்னோடு கிட்டி சேர்கிறதற்காக உமக்கு நன்றி.