சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் 16:13)
தேவன் சொல்வதைக் கேட்பதில் இருக்கும் பல நன்மைகளில் ஒன்று, அவருடைய சத்தத்தைக் கேட்பது, நம்மை எதிர்காலத்திற்குத் தயாராக்குகிறது. பரிசுத்த ஆவியானவர், பிதா அவருக்குக் கொடுக்கும் செய்திகளை நமக்குத் தருகிறார், மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் காரியங்களை அவர் அடிக்கடி நமக்கு சொல்கிறார்.
வேதத்தில் தேவன் மக்களிடம் பேசிய மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய செய்திகளை அவர்களுக்கு வழங்கிய பல நிகழ்வுகளை நாம் காண்கிறோம். பூமியின் குடிகளை அழிக்க வரவிருக்கும் ஒரு வெள்ளத்திற்குத் தயாராகும்படி நோவாவிடம் கூறினார் (ஆதியாகமம் 6:13-17 ஐப் பார்க்கவும்). அவர் மோசேயிடம், நீ பார்வோனிடம் சென்று இஸ்ரவேலர்களின் விடுதலைக்காகக் கேள் என்றும் அவன் அவர்களை போக விட மாட்டான் என்றும் கூறினார் (யாத்திராகமம் 7ஐப் பார்க்கவும்). வெளிப்படையாக, எதிர்காலத்தில் நடக்கும் அனைத்தையும் தேவன் நமக்குச் சொல்வதில்லை, ஆனால் சில காரியங்களை அவர் நமக்குத் தெரிவிப்பார் என்று அவருடைய வார்த்தை உறுதியளிக்கிறது.
ஏதாவது நல்லது அல்லது சவாலான காரியம் ஒன்று நடக்கப் போகிறது என்று நான் உணர்ந்த நேரங்கள் உண்டு. எனக்கு ஒரு சவால் காத்திருக்கும் போது, அதுபற்றிய சில முன்னறிவிப்பு எனக்கு இருந்தால், அதைப் பற்றிய அறிவு, கடினமான சூழ்நிலை வரும்போது அதைத் தணிக்க உதவுகிறது. வாகனத்தில் ஷாக் அப்சார்பர்கள் இருந்தால், அது வாகனம் குழிக்குள் இறங்கி ஏறும் போது, யாருக்கும் காயம் ஏற்படாதவாறு பயணிகளை பாதுகாக்கிறது, தேவன் நமக்கு முன்கூட்டியே தகவல் கொடுப்பதும் அதே வழியில் செயல்படுகிறது.
பரிசுத்த ஆவியானவருடைய ஊழியத்தின் ஒரு பகுதி, வரவிருக்கும் காரியங்களை நமக்குச் சொல்வது. அவர் தேவனுடைய மனதை அறிவார், நம் வாழ்வுக்கான தேவனுடைய தனிப்பட்ட திட்டங்களையும் அவர் அறிவார். தேவன் நமக்காக வைத்திருக்கும் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்காய், நாம் தெரிந்து கொள்ள வேண்டியதை அவர் வெளிப்படுத்துவார்.
இன்று உங்களுக்கான தேவனுடைய வார்த்தை: எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதை உங்களுக்குச் சொல்ல பரிசுத்த ஆவியானவரை நம்புங்கள்.