
மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)
பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதென்றால், நாம் எடுக்கும் ஒவ்வொரு பெரிய மற்றும் சிறிய முடிவுகளிலும் அவரை ஈடுபடுத்த அனுமதிப்பதாகும். அவர் நம்மை சமாதானத்தினாலும், ஞானத்தினாலும், தேவனுடைய வார்த்தையினாலும் வழிநடத்துகிறார். அவர் நம் இருதயங்களில் ஒரு அமைதியான, மெல்லிய குரலில் பேசுகிறார். அதை நாம் “உள்ளான சாட்சி” என்று அழைக்கிறோம். பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட விரும்புகிறவர்கள் உள்ளான சாட்சியைப் பின்பற்றவும், விரைவாக பதிலளிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, நாம் ஒரு உரையாடலில் ஈடுபட்டு, அதில் அசௌகரியமாக உணர ஆரம்பித்தால், உரையாடலை வேறு திசையில் திருப்ப வேண்டும் அல்லது அமைதியாக இருக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு சமிக்ஞை செய்யலாம். நாம் எதையாவது வாங்கப் போகிறோமெனில், உள்ளுக்குள் அசௌகரியமாக உணர்ந்தால், நாம் ஏன் சங்கடமாக இருக்கிறோம் என்பதை பகுத்தறிய வேண்டும். ஒருவேளை அந்தப் பொருள் நமக்குத் தேவையில்லை அல்லது வேறு எங்காவது விற்பனையில் இருப்பதைக் காணலாம் அல்லது அதை வாங்குவதற்கான தவறான நேரமாக இருக்கலாம். ஏன் என்று நாம் எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை; நாம் வெறுமனே கீழ்ப்படிய வேண்டும்.
ஒரு முறை செருப்புக் கடையில் இருந்த ஞாபகம். நான் திடீரென்று மிகவும் சங்கடமாக உணர்ந்த போது, முயற்சிக்க பல ஜோடி காலணிகளைத் தேர்ந்தெடுத்தேன். கடைசியாக பரிசுத்த ஆவியானவர், “இந்தக் கடையை விட்டு வெளியேறு” என்று கூறுவதை நான் கேட்கும் வரை அந்த அசௌகரியம் இருந்த்து. மேலும் அது அதிகரித்தது.
நாங்கள் வெளியே சென்றோம். ஏன் என்று எனக்குத் தெரியாது, எனக்குத் தெரிய வேண்டியதில்லை. ஒருவேளை கடவுள் என் வழியில் வரும் தீங்குகளில் இருந்து என்னைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லது ஒருவேளை கடையில் உள்ளவர்கள் ஏதாவது நெறியற்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். ஒருவேளை அது கீழ்ப்படிதலுக்கான சோதனையாக இருக்கலாம். நான் கூறியது போல், கடவுள் ஏன் நம்மை சில வழிகளில் வழிநடத்துகிறார் என்பதை நாம் எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவருடைய குரலுக்குக் கீழ்ப்படிவதே நமது பங்கு.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளைக் கனப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழி, அவருக்கு உடனடியாகக் கீழ்ப்படிவதாகும்.