
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; (யாத்திராகமம் 15:2)
இன்றைய வசனத்தில் நாம் வாசிக்கும் மோசே மற்றும் இஸ்ரவேலர்களைப் போல் இருக்க வேண்டும். கடவுள் அவர்களுக்கு பெலன் கொடுத்தது மட்டுமல்லாமல் (பழைய ஏற்பாடு முழுவதும் பார்க்கிறோம்), அவரே அவர்களின் பெலனாக இருந்தார் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1 சாமுவேல் 15:29, தேவனை “இஸ்ரவேலின் பெலன்” என்று குறிப்பிடுகிறது. இஸ்ரவேலர்கள், கடவுள் தங்கள் பெலன் என்பதை அறிந்த ஒரு காலம் இருந்தது, ஆனால் அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். இந்த முக்கியமான உண்மையை அவர்கள் மறந்து விட்டதால், அவர்கள் ஒரு தேசமாகத் தடுமாறி தோல்வியடையத் தொடங்கினர். மேலும் அவர்களின் வாழ்க்கை அழியத் தொடங்கியது. அவர்கள் தங்கள் பெலனான கடவுளிடம் திரும்பியபோது, காரியங்கள் அவர்களிடமாய்த் திரும்பியது.
கடவுள் உங்கள் பெலன் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலும், அதை நீங்கள் விசுவாசத்தால் பெற வேண்டும். அவரில்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது என்றும், என்னை இயக்குவதற்கும், பலப்படுத்துவதற்கும் நான் முழுவதுமாக அவரையே சார்ந்திருக்கிறேன் என்றும் கடவுளிடம் சொல்வதன் மூலம் ஒவ்வொரு நாளையும் நான் தொடங்குகிறேன். தேவைப்படும்போது நம்மை உற்சாகப்படுத்தும் அல்லது வழிநடத்துதலைக் கொடுக்கும் ஒரு வார்த்தையைப் பேசி நம்மைப் பலப்படுத்துவார். ஞானத்தையும், நுண்ணறிவையும் பேசி நம்மைப் பலப்படுத்துவார். நாம் சோர்வாக இருக்கும்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலைக் கொடுப்பதன் மூலம் அவர் நம்மை உடல் ரீதியாக பலப்படுத்துகிறார். மேலும் கடினமான மனிதர்களையும் சூழ்நிலைகளையும் தாங்கும் வலிமையையும் தருகிறார்.
காரியங்களை நீங்களே செய்ய முயற்சிப்பதை விட கடவுளை, உங்கள் பலமாக நம்புங்கள். உங்கள் மேல் நிறைய பேர் சார்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் கடவுளைச் சார்ந்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும். இன்று அவரை உங்கள் வாழ்க்கையின் பலமாக விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் எளிதாக எதையும் சாதிக்க முடியும் என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்கள் பலமாக இருக்கட்டும்.