“இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” – மத் 5:16
பிரசித்தி பெற்ற தத்துவ ஞானியும், பேச்சாளருமான எட்மண்ட் ப்ரூக் என்பவர் ஒருமுறை, ‘தீமை வெற்றி பெறுவதற்கு தேவையானதெல்லாம் நல்லவர்கள் ஒன்றும் செய்யாமலிருப்பது தான்’ என்றார். அது உண்மையே. ஒன்றும் செய்யாமலிருப்பது சுலபமானதே, ஆனால் அது ஆபத்தானதும் கூட. தீமைக்கு எங்கே எதிர்ப்பு இல்லையோ அங்கே அது பெருகும்.
தவறாக இருப்பவற்றைப் பற்றி குறை கூறும் கண்ணிக்குள் நாமனைவருமே விழுகின்றோம். ஆனால் குறை கூறுவது நம்மை இன்னும் அதிகமாய் சோர்வுறச் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்கிறதில்லை. அதில் எந்தவிதமான நேர்மறையான வல்லமையும் இல்லாததால், அது எதையுமே மாற்றுகிறதில்லை.
தேவன், தாம் இந்த உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, அதில் தவறாக நடந்து கொண்டிருக்கும் அனைத்தைப் பற்றியும், குறை கூறிக்கொண்டிருப்பாரேயென்றால், இந்த உலகம் எத்தனை குழப்பத்துக்குள்ளாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஆனால் பிதா குறை கூறுவதில்லை. அவர் தொடர்ந்து நல்லவராக இருக்கிறார், நீதிக்காக கிரியை செய்கின்றார்.
தீமை வல்லமை மிகுந்தது, ஆனால் நம்மில் அதைவிட அதிக வல்லமை உள்ளது. தேவன் தம்முடைய பிள்ளைகளாகிய உங்கள் மூலமாகவும், என் மூலமாகவும் இந்த உலகத்திலே கிரியை செய்ய தெரிந்து கொண்டிருக்கிறாரென்று நாம் உணர வேண்டும். அவருடைய ஒளி நமக்குள்ளே இருக்கிறது. நாம் ஒன்றுமே செய்யாமல் இருக்க இயலாது. நாம் அவருடைய நாமத்திலே நண்மை செய்து, வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் சரி, நாம் ஒளி வீச வேண்டும்.
ஜெபம்
தேவனே, சும்மா உட்கார்ந்திருந்து எதுவும் செய்யாமல் இருப்பது சுலபமே. ஆனால் உம் ஒளியை பிரகாசமாக வீச செய்வது மிகவும் நல்லது. தீமைக்கு எதிர்த்து நின்று நான் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உம் நண்மையிலே செயல்பட எனக்கு உதவுவீராக.