
“அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” – சங்கீதம் 1:3
ஸ்திரத்தன்மை என்பது நம் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்று. எரேமியா 17:8 மற்றும் சங்கீதம் 1:3 இரண்டு வசனங்களும், உறுதியாக நட்ட மரங்களைப் போல இருக்கும்படி நமக்கு அறிவுறுத்துகின்றன. 1 பேதுரு 5:8 சாத்தான் நம்மை விழுங்குவதைத் தடுக்க நாம் நல்ல சம நிலையோடும், இச்சையடக்கத்துடனும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் வேர் கொண்டவர்களாய், நிலையானவர்களாய், உறுதியானவர்களாய், அசைக்கப்படாதவர்களாய் இருக்க வேண்டும்.
இயேசுவே, நாம் வேர் கொள்ள சிறந்த மண். நீங்கள் நிலையானவராக இருக்க அவரை நம்பியிருக்கலாம் – எல்லா நேரத்திலும் இயேசு ஒரே மாதிரியானவர், எப்போதும் உண்மையுள்ளவர், நம்பத்தக்கவர், அவருடைய வார்த்தைக்கு உண்மையாகவும் முதிர்ச்சியுடனும் இருக்கிறார். அவர் ஒரு நேரம் ஒரு மாதிரியும், மற்ற நேரம் வேறு மாதிரியும் இருப்பதில்லை. அவர் சூழ்நிலைக்கேற்ப மாறுகிறவரல்ல. எனவே நீங்கள் அவரிடம் வேரூன்றியிருந்தால், நீங்களும் நிலையாயிருப்பீர்கள்.
துன்பத்தில் அமைதியாக இருக்க தேவன் நமக்கு வல்லமையை கொடுக்க விரும்புகிறார். உறுதியாக நட்ட மரங்களைப் போல நாம் நிலையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் நாம் எங்கு நடப்படுவோம் என்பதை நாம் தேர்வு செய்கிறோம். நீங்கள் உலகில் வேரூன்றி இருப்பீர்களா? உங்கள் உணர்ச்சிகளிலா? உங்கள் சூழ்நிலைகளிலா? உங்கள் கடந்த காலத்திலா? அல்லது கிறிஸ்துவில் உங்களை வளர்ப்பதற்கு இன்று நீங்கள் தேர்வு செய்வீர்களா? அவரைச் சார்ந்து இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவருடைய ஸ்திரத்தன்மை இன்று உங்களுடையதாக இருக்கலாம்.
ஜெபம்
தேவனே, நான் உம்மிலே உறுதியாக வேரூன்ற விரும்புகிறேன். நீர் ஒருபோதும் மாற மாட்டீர். எனவே எந்த சூழ்நிலையிலும் என்னை நிலையானவனாக வைத்திருக்க நான் உம்மை நம்ப முடியும்.