துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; (எபேசியர் 5:18)
ஆவியானவரால் “எப்போதும் நிரப்பப்பட வேண்டும்”—அதாவது எல்லா நேரங்களிலும் நிரப்பப்பட வேண்டும் என்று கடவுளுடைய வார்த்தையில் உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவது முக்கியம்.
அதற்கு நம் வாழ்வில், அவருக்கு முதலிடம் கொடுப்பது அவசியம். பெரும்பாலும் இதற்கு ஒழுக்கம் தேவைப்படுகிறது, ஏனென்றால் மற்ற பல விஷயங்கள் நம் நேரத்தையும், கவனத்தையும் எடுத்துக் கொள்கிறது. நாம் விரும்பும் மற்றும் நமக்கு தேவையான பல விஷயங்கள் உள்ளன, ஆனால் கடவுளை விட முக்கியமானது எதுவுமில்லை. அவருடைய வார்த்தையின் மூலம் தினமும் கடவுளைத் தேடுவதும், அவருடன் நேரத்தைச் செலவிடுவதும், அவருடைய பிரசன்னத்தில் நிறைந்திருப்பதற்கான திறவுகோலாகும். நன்றியுணர்வுடனான மனப்பான்மை மிகவும் உதவியாக இருக்கும். அதே போல் நம் எண்ணங்களை கவனமாகப் பாதுகாப்பதும் முக்கியம்.
பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் கடந்து போக மாட்டார்; அவர் நமக்குள் குடியேறிய பின், வெளீயேற மறுத்து விடுகிறார். ஆனால் ஆவிக்குறிய விஷயங்களை நம்மில் தூண்டி விடுவது முக்கியம். நெருப்பு அணைந்து விட்டால் சூடாக இருக்கும் எதுவும் குளிர்ச்சியாகிவிடும்.
என்னைத் தவிர நீ வேறு எதையும் கேட்கக் கூடாது என்று தேவன் சொன்னார். அப்படியே ஆறுமாத காலத்தை நான் கடந்து சென்றேன். நான் முன்பு அறிந்ததை விட ஆழமான நெருக்கத்தில் அவரை அறிந்து கொள்வதற்கு, ஒழுக்கம் தேவையாக இருந்தது. நான், “கடவுளே, எனக்கு _____ வேண்டும்” என்று சொல்ல ஆரம்பிப்பேன், பின்னர் அவர் எனக்கு அறிவுறுத்தியதை நான் நினைவில் கொண்டு வருவேன். நான் என் வாக்கியத்தை, ” நீர், எனக்கு அதிகமாக வேண்டும்” என்று முடிப்பேன்.
கடவுள் நமக்குத் தேவையான அனைத்தையும் தருகிறார்; நாம் கேட்பதற்கு முன் நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். நாம் அவரில் மகிழ்ந்து, அவருக்காக காத்திருந்தால், அவர் நம் இருதயத்தின் விருப்பங்களையும் கொடுப்பார். இன்றும், ஒவ்வொரு நாளும், நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கவும், எல்லாவற்றையும் விட அதிகமாக தேவனை விரும்பவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். மீதியை அவர் பார்த்துக் கொள்வார்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியால் “நிரம்பியிருக்கிறீர்கள்” என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.