“அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.” – 1 கொரி 13:5
நாம் அனைவரும் சில நேரங்களில் மனக்காயமடைகிறோம். நாம் ஆவிக்குறிய ரீதியாக வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, விரைவாக மன்னிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். உதாரணமாக, யாராவது உங்களை காயப்படுத்தியிருந்தால், உங்கள் வாழ்க்கையின் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அந்தக் குற்றத்தைப் பிடித்துக் கொண்டு உங்களையே வருத்திக் கொண்டு இருக்க வேண்டாம். நீங்கள் பல ஆண்டுகளாக அந்த சம்பவத்தில் வாழ்கிறீர்கள், ஆனால், மற்ற நபர் உங்களைப் பற்றி நினைக்கக் கூட மாட்டார். அதே நேரத்தில், அது ஒரு நபரை மட்டுமே காயப்படுத்துகிறது – உங்களை.
நாம் மன்னியாமல் இருக்கும் போது, மற்ற நபரை விட நம்மை சிறந்தவர்களாக எண்ணிக் கொண்டு கணக்கு வைக்க முயற்சிக்கிறோம். எங்கள் திருமணத்தின் ஆரம்ப நாட்களில், டேவும், நானும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது நான் கடந்த காலத்தில் நடைபெற்ற காரியங்களையெல்லாம் சொல்லுவேன். டேவுக்கு அது நினைவில் கூட இருக்காது. அவர் என்னிடம் “எல்லாவற்றையும் நீ எங்கே வைத்திருக்கிறாய்?” என்று கேட்பார். ஆம், எனக்கு ஒரு இடம் இருந்தது, அவையெல்லாம் அங்கே இருந்து என்னை தின்று கொண்டிருந்தது. டேவ் செய்த ஒவ்வொரு தவறான புதிய விஷயமும், அது என் இருதயத்தில் ஒரு கசப்பாக மாறும் வரை இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது.
கடவுளுக்கு நன்றி, நான் வாழ ஒரு சிறந்த வழியைக் கற்றுக்கொண்டேன்! நாம் கடவுளின் அன்பில் நடக்கும்போது, நமக்குச் செய்த தவறுகளுக்கு கணக்கு வைப்பதிலிருந்து விடுதலை பெறுவோம். மன்னியாமலிருப்பதின் வேதனையினால் இன்று நீங்கள் வருந்திக் கொண்டிருப்பீர்களென்றால், கணக்கு வைக்காமலிருக்க உதவும் படி கேளுங்கள். உங்கள் கசப்பை இன்று நீங்கள் விட்டு விடலாம்.
ஜெபம்
கடவுளே, நான் இனி கணக்கு வைத்துக் கொண்டு, மன்னியாமல் வாழ விரும்பவில்லை. நான் அதை உம்மிடம் விட்டு விட்டு, எனக்கு இழைக்கப்பட்ட தீமையைப் பற்றிய கணக்கை வைக்காமல் உம்முடைய அன்பிலே வாழ எனக்கு உதவுவீராக.