ஞானத்தைப் பெறுவது எப்படி?

ஞானத்தைப் பெறுவது எப்படி?

என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். (நீதிமொழிகள் 1:23)

கடவுள் நம்மிடம் பேசும் போது, நாம் ஜெபித்து அவருடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படிதல் என்பது நமக்கு எப்போதாவது நடக்கும் நிகழ்வல்ல; அது நமது வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும். தினமும் கடவுளுக்குக் கீழ்ப்படியத் தயாராக இருப்பவர்களுக்கும், பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு மட்டுமே கீழ்ப்படியத் தயாராக இருப்பவர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை கடவுள் நிச்சயமாக மக்களுக்குக் காட்டுகிறார். ஆனால் அவருக்காக முழு மனதுடன் வாழ முடிவு செய்பவர்களுக்கும், அவருக்குக் கீழ்ப்படிவதைத் தங்கள் வாழ்க்கை முறையாகக் கொண்டவர்களுக்கும் அவர் ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்குகிறார். உண்மையான சமாதானத்துக்கான ஒரே வழி கடவுளுக்குக் கீழ்ப்படிவதுதான்.

பலர் பெரிய பிரச்சினைகளில் கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஆனால் சிறிய விஷயங்களில் கீழ்ப்படிதல், அவர்களின் வாழ்க்கைக்கான அவரது திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. சிறிய விஷயங்களில் நாம் உண்மையாக இல்லாவிட்டால், நாம் ஒருபோதும் பெரிய ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட மாட்டோம் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது (லூக்கா 19:17 ஐப் பார்க்கவும்). கடவுள் நம்மிடம் கேட்கும் சிறிய காரியங்களைச் செய்ய நாம் உண்மையாக இருக்கப் போவதில்லை என்றால், நமக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்து நம்மை நம்புவதற்கு அவருக்கு எந்த காரணமும் இல்லை.

சிறிய விஷயங்களில் கூட கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களை கடுமையாக வலியுறுத்துகிறேன். சகோதரர் லாரன்ஸ் என்று அழைக்கப்படும் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பக்தன், கடவுளின் முன்னிலையில் தொடர்ந்து நடந்ததற்காக நன்கு அறியப்பட்டவர். கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரை நேசிப்பதால், தரையில் இருந்து வைக்கோல் துண்டை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

இன்றைய வசனத்தில், கடவுள் நம்மைத் திருத்தும் போது நாம் அவருக்குச் செவிசாய்த்தால் அவருடைய வார்த்தைகளை நமக்குத் தெரியப்படுத்துவார் என்று கூறுகிறார். நாம் அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றி, அவர் நம்மிடம் கேட்கும் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் செய்வதில் மகிழ்ச்சியடைவோமானால், அவர் தம்முடைய ஞானத்தை நமக்குக் கொடுப்பார். மேலும் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகமான வெளிப்பாட்டைப் பெறுவோம்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் சிறிய விஷயங்களில் உண்மையுள்ளவராக இருந்தால், கடவுள் உங்களை பெரிய காரியங்களை ஆளுபவராக ஆக்குவார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon