இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார். (எபிரெயர் 4:7)
நம் வாழ்வின் ஒரு பகுதியில் தேவனுடைய சத்தத்தைக் கேட்க நாம் விரும்பாதபோது, மற்ற பகுதிகளில் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியாது. சில நேரங்களில், நாம் கேட்க விரும்புவதை மட்டுமே கேட்கிறோம், இது “தேர்ந்தெடுக்கப்பட்ட கேட்குதல்” என்று அழைக்கப்படுகிறது. இப்படி நிகழும்போது, தேவனிடமிருந்து இனி கேட்க முடியாது என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. அவர் அவர்களிடம் ஏற்கனவே பேசி விட்டார் ஆனால் அவர்கள் பதில் சொல்லத் தவறி விட்டார்கள் என்பதுதான் உண்மை. இதை விளக்குவதற்கு ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு பெண் ஒருமுறை என்னிடம் சொன்னாள், அவள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டேன்: சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு குற்றத்திற்காக அவள் சகோதரியை அவள் மன்னிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆனால் அந்தப் பெண் மன்னிக்கத் தயாராக இல்லை, அதனால் அவள் விரைவில் ஜெபிப்பதை நிறுத்தினாள். அவள் மீண்டும் மற்றொன்றிற்காக தேவவனைத் தேடும்போது, அவள் இருதயத்தில் அவள் கேட்டதெல்லாம், “முதலில் உன் சகோதரியை மன்னி” என்பதே.
இரண்டு வருட காலத்தில், ஒவ்வொரு முறையும் அவள் ஒரு புதிய சூழ்நிலையில் கடவுளுடைய வழிநடத்துதலைக் கேட்கும்போது, அவளுடைய சகோதரியை மன்னிக்கும்படி அவர் மெதுவாக அவளுக்கு நினைப்பூட்டினார். இறுதியாக, அவள் கீழ்ப்படியவில்லை என்றால், அவள் ஒருபோதும் தன் பழக்கத்திலிருந்து விடுபட மாட்டாள் அல்லது ஆவிக்குறிய ரீதியில் வளரமாட்டாள் என்பதை உணர்ந்தாள், அதனால் அவள், “ஆண்டவரே, என் சகோதரியை மன்னிக்கும் சக்தியை எனக்குக் கொடும்” என்று ஜெபித்தாள். உடனடியாக அவள் சகோதரியின் பார்வையில் இருந்து, பல விஷயங்களைப் புரிந்துகொண்டாள்-அவள் இதுவரை கருத்தில் கொள்ளாத விஷயங்கள். சிறிது காலத்தில் அவளுடைய சகோதரியுடனான அவளுடைய உறவு முற்றிலும் மீட்டெடுக்கப்பட்டது மற்றும் விரைவாக முன்னெப்போதையும் விட வலுவானதானது.
நாம் உண்மையிலேயே தேவனிடமிருந்து கேட்க விரும்பினால், அவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதைக் கேட்க நாம் திறந்த மனதுடையவர்களாகவும் அதற்கு பதிலளிக்க தயாராகவும் இருக்க வேண்டும். இன்று கேட்கவும், கீழ்ப்படியவும் உங்களை ஊக்குவிக்கிறேன்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேட்குதல் இருக்கிறதா? கடவுளின் சத்தத்தைக் கேட்க ஆவலாக இருங்கள்.