“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.” – சங்கீதம் 46:10
இன்று இவ்வுலகிலே நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான காரியங்களில் ஒன்று எப்படி அமர்ந்திருப்பது என்பதேயாகும்.
நாம் எப்படி அமர்ந்திருப்பது / அமைதியாக இருப்பது என்பதை அறியாமலிருப்பதே நம்மில் அனேகர் அழுத்தத்திற்குள்ளாக இருப்பதற்கான காரணங்களுள் முக்கியமான காரணம் என்று நான் நம்புகிறேன். அவரை அறிந்து கொள்ள அவருடன் நேரம் செலவழிப்பதின் மூலம் நாம் அவருடைய அமர்ந்த மெல்லிய சத்தத்தை கேட்கக் கற்றுக் கொள்கிறோம். அதனால் அவர் நம்மை வழி நடத்துகிறார்.
நாம் நம் உள்ளத்திலே அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவனுடைய சத்தத்தைக் கேட்க எப்போதுமே ஆயத்தமாகயிருக்கத்தக்க அதே அமர்ந்த நிலையிலே இருக்க வேண்டும். இன்று அனேகர் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறிக் கொண்டே இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் மனம் அமைதியாக இருக்க அறிந்திருக்கவில்லை. அவர்கள் இருதயத்திலே எப்படி அமர்ந்திருப்பது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
நாம் நம் வேகத்தை குறைத்து, பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல்களை கேட்கத்தக்கதாக நம் மனதை அமைதிப்படுத்திக் கொள்வோமேயென்றால், நாம் கீழ்படிய ஆயத்தமாய் இருக்கக் கூடிய ஒரு சமாதானமான இடத்திலே ஜீவிப்போம். நாம் தேவனுக்கு முன்பாக அமர்ந்திருக்கும் வரை, சோர்ந்து, களைப்படைந்து, மன அழுத்தம் இல்லாமல், சமாதானமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்வது அவ்வளவு கடினமானதல்ல, சுலபமானதே என்பதை கண்டறிவோம்.
ஜெபம்
தேவனே, நீரே என் தேவன் என்பதை கண்டுணர்ந்திருக்கிறேன். உமக்கு முன் அமர்ந்திருப்பது முக்கியமானது என்பதை அறிந்திருக்கிறேன். எனவே உள்மனதிலே எப்படி சமாதானத்துடன் இருந்து உம்முடைய சத்தத்தைக் கேட்க எப்போதும் ஆயத்தமாக இருப்பது என்பதை காண்பித்தருள்வீராக.