“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” – 1 பேதுரு 5:5
1 பேதுரு 5:5 தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்…ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார் என்று சொல்லுகிறது. எவரேனும் தான் தாமாகவே உருவாகிவிட்டோமென்று நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு காத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இயேசு சொன்னார்,… என்னாலன்றி உங்களால் ஒன்றும் செய்ய இயலாது (யோவான் 15:5).
நாம் பெருமையுடன் வாழும்போது, கடவுளின் உதவியின்றி வெற்றிபெற முயற்சிக்கும்போது, எதிரியின் பல தாக்குதல்களுக்கு கதவை திறந்து விடுகிறோம். ஆனால் தாழ்மை என்பது தேவனுடைய போர்வை. அது தேவனுடைய அனுக்கிரகத்தை நம் வாழ்வில் கொண்டு வந்து நம்மைப் பாதுகாக்கின்றது. “ஆண்டவரே, என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறி உங்களைத் தாழ்த்திக் கொள்ளும்போது, அவர் உங்களுக்கு உதவுவார்.
நாம் தேவனை சார்ந்து அவரை நம்பியிருக்காவிட்டால், எதிலும் வெற்றி பெற அவர் அனுமதிக்க மாட்டார். ஆனால் நாம் தேவனுடைய பலத்த கையின் கீழ் நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது, சரியான நேரத்தில், அவர் நம்மை உயர்த்துவார் (1 பேதுரு 5:6 ஐக் காண்க). ஏற்ற காலம் என்பது கடவுளின் நேரம் – நாம் தயாராக இருக்கிறோம் என்று நாம் அறிந்திருக்கும் போதல்ல, அவர் அறிந்திருக்கும் போது. அதை நாம் விரைவில் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்ளும் போது, கடவுள் தனது திட்டத்தை நம் வாழ்வில் விரைவாய் செயல்படுத்த முடியும்.
ஜெபம்
தேவனே, நீர் என்னை ஏற்ற காலத்தில் உயர்த்துவீர் என்பதை அறிந்து, நான் என்னை உமக்கு முன் தாழ்த்துகிறேன். என்னால் சொந்தமாக வெற்றி பெற முடியாது. எனக்கு உம்முடைய உதவி தேவை.