“இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.” – ஏசாயா 64:8
நாம் பரிபூரணராக இருக்க வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறதில்லை – அவர் நம்மை உண்டாக்கினார். நாம் மனிதர்கள் என்றும், தவறுகளை செய்வோம் என்றும் அவருக்குத் தெரியும். நாம் ஒவ்வொரு நாளும் எழுந்து, தேவன் நமக்கு அளித்த ஈவுகளைக் கொண்டு அவருக்கு சேவை செய்வதே நம்முடைய வேலையாகும். நாம் தவறு செய்யும் போது, தேவனோடு சரியாக வேண்டும். அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொண்டு தொடர்ந்து செல்ல வேண்டும்.
பலர் தேவன் அவர்களைப் பயன்படுத்த முடியாது என்று நினைக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் பரிபூரணமற்றவர்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் இது ஒரு பொய். தேவன் மண்பாண்டங்களாகிய நம்மை அவருடைய பணி செய்ய பயன்படுத்துகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் தேவன் தம்முடைய நற்குணத்தையும், ஒளியையும் நிரப்ப விரும்பும் பாண்டமாக இருக்கிறோம். அந்த நன்மையையும், ஒளியையும் இந்த இருண்ட உலகத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். அதை நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
உங்கள் குறைபாடுகளுக்கு பயப்பட வேண்டாம்; அவற்றை ஒப்புக் கொண்டு, எப்படியும் அவர் உங்களைப் பயன்படுத்த நீங்கள் அவரை அனுமதிக்க வேண்டும். இல்லாததைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, உங்களை அப்படியே அவருக்கு கொடுங்கள். பரிபூரணமான தேவன் மீதும், அவர் உங்களிடமிருந்தும், உங்களைக் கொண்டும் என்ன செய்ய முடியும் என்பதில் உங்கள் கவனத்தை வைத்திருங்கள்.
ஒரு உடைந்த பானையாக, நீங்கள் அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும். நீங்கள் யாரையாவது சந்தோஷப்படுத்தலாம், ஊக்குவிக்கலாம், திருத்தலாம், அறிவுறுத்தலாம். உங்கள் ஈவுகளையும், திறமையையும் கடவுளுக்கு சேவை செய்ய பயன்படுத்தலாம்.
ஜெபம்
தேவனே, நான் ஒரு “விரிசல் பானையாக” இருக்கலாம், ஆனால் நீரே வனைபவர். என்னுடைய குறைபாடுகளோடும் என்னை உம்முடைய நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம். உம்முடைய நன்மை மற்றும் வெளிச்சத்தால் என்னை நிரப்பும். அதனால் என்னைச் சுற்றியுள்ள உலகிற்கு அதை கொண்டு செல்ல முடியும்.