“வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.” – லூக்கா 8:17
பெரும்பாலான மக்கள் தங்கள் தவறுகளையும், பலவீனங்களையும் பற்றி பேச விரும்ப மாட்டார்கள். அது போன்ற காரியங்களை நாம் ஏன் திறந்த வெளியில் கொண்டு வர விரும்புவதில்லை? ஏனென்றால் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நாம் பயப்படுகிறோம். நிராகரிக்கப்படுவோம், தவறாகப் புரிந்து கொள்ளப்படுவோம். நாம் யார் மேல் அக்கறை கொண்டவர்களாய் இருக்கிறோமோ அவர்களால் நேசிக்கப்பட மாட்டோம் அல்லது அவர்கள் நம்மைப் பற்றி உண்மையிலேயே தெரிந்து கொண்டால், அவர்கள் நம்மைப் பற்றி வேறுபட்ட கருத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்றெல்லாம் எண்ணி பயப்படுகிறோம்.
ஆனால் நம்முடைய தவறுகளை அறிக்கையிடுவது, நம் உணர்ச்சிகளை குணப்படுத்த மிகவும் முக்கியமானதாகும். மறைக்கப்பட்ட எல்லா காரியங்களும் இறுதியில் வெளியரங்கமாக்கப்படும் என்று வேதம் கூறுகிறது. ஆகவே, இன்று நம்முடைய துன்பங்களையும் பலவீனங்களையும் நாம் நம்பும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
என் கடந்த காலத்திலிருந்த துஷ்பிரயோகம் பற்றி, ஒருவருடன் பகிர்ந்து கொள்ளும் தைரியத்தை, நான் இறுதியாக வளர்த்துக் கொண்ட போது, அது நம்பமுடியாத அளவிற்கு உணர்ச்சி ரீதியாககடினமாக இருந்தது. ஆனால் இப்போது நான் எனது கடந்த காலத்தைப் பற்றி பேசும்போது, நான் வேறு ஒருவரின் பிரச்சினையைப் பற்றி பேசுவது போன்று இருக்கிறது.
என் வாழ்க்கையில் ஏற்பட்ட வலி மற்றும் பெலவீனங்களையும் அறிக்கையிட்டது, குணமடைவதையும், மறுசீரமைப்பதையும் கொண்டு வந்தது.
நீங்கள் யாரை நம்பலாம் என்பதை உங்களுக்கு காட்டும்படி தேவனிடம் ஜெபியுங்கள். பின்னர் அவர்களிடம் ஒரு வெளிப்படையான மற்றும் நேர்மை உறவு கொண்டிருக்க உங்களை அர்பணியுங்கள். நீங்கள் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்ளும்போது, தேவனுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, என் தவறுகளை, பலவீனங்களை, வேதனைகளை நான் பகிர்ந்து கொள்ள, என் வாழ்க்கையில் நீங்கள் யாரை வைத்திருக்கிறீர்கள் என்று எனக்குக் காட்டும். என் வாழ்க்கையிலும் அவர்களுடைய வாழ்க்கையிலும் சுகத்தைக் கொண்டு வாரும்.