
“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே.” – லூக்கா 6:35
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊழியத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒருவரைப் பற்றி ஒருவர் என்னிடம் கூறினார். அவர் ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தார், என் நண்பர்களும் அதே உணவகத்தில் இருந்தனர், என்னைப் பற்றிய அவர்களின் உரையாடலைக் கேட்டார் – அவர்கள் என்னைப் பற்றி நல்ல விஷயங்கள் எதையும் சொல்லவில்லை.
முதலில் அதை நான் கேட்ட போது எனக்கு கோபம் வந்தது, மீண்டும் அவர்களிடம் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று அவர்களிடம் சொல்ல விரும்பினேன். ஆனால் அன்றிரவு, பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அப்படியாக நீ எதுவும் செய்யக் கூடாது” என்று கூறினார். ‘நீ என்ன போதிக்கிறாயோ அதைத் தான் செய்யப் போகிறாய் என்றார். நீ அவருக்கு ஒரு பரிசை வாங்கிக் கொடு என்றும், இத்தனை வருடங்களாக அவர் ஆற்றிய சேவைக்கு அவரை பாராட்ட வேண்டும் என்றார்.
அது எனக்கு எளிதானதாக இருக்கவில்லை, ஆனால் அவருடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய தேவன் எனக்கு கிருபை கொடுத்தார்.
அந்த சூழ்நிலையைப் பற்றி நான் அதிகம் நினைவில் வைத்திருப்பது என்னவென்றால், அவருக்கு ஏதாவது நல்லது செய்ய நான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியவுடன், நான் அதை மகிழ்ச்சியாக செய்தேன்.
நம்மை காயப்படுத்தியவர்களை மனதுருக்கத்துடன் நாம் பார்க்கும்போது, நமக்குள் ஒரு களிப்பு உண்டாகிறது. ஏனென்றால் தேவனுடைய சந்தோசம் நம் ஆத்துமாவை நிரப்புகிறது. எனவே இன்று நீங்கள் யாரை மன்னித்து ஏதாவது நல்லதைச் செய்ய முடியும்? மன்னிப்பதை பயிற்சி செய்யுங்கள். உண்மையான மகிழ்ச்சி, சமாதானத்துக்கு நேராக உங்களை நடத்தும் பாதையைப் பின்பற்றுங்கள்!
ஜெபம்
தேவனே, உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, என்னைத் துன்புறுத்தியவர்களுக்கு நன்மை செய்ய உம்முடைய கிருபை எனக்கு தேவை. நான் அவர்களை மன்னித்து ஆசீர்வதிக்கும் போது, என் ஆத்துமாவில் நீர் எனக்கு சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தருவீர் என்பதை நான் அறிவேன்.