“அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.” – ஏசா 53:11
நம்மில் அனேகருக்கு மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், நமக்கு நம்மையே பிடிக்காது என்பது தான். இப்படிப்பட்ட கண்ணோட்டத்துடன் தேவன் நம்மை நேசிக்கிறார் என்று நம்புவது கடினமாகும்.
ஆனால் அனேக ஆண்டுகளாக, இந்த பிரச்சினையிலே நான் போராடிக் கொண்டிருந்தேன். 75 சதவிகித நேரத்தை என்னை மாற்ற முயன்றே செலவழித்தேன். ஆனால் நடந்ததெல்லாம் சாத்தான் தொடர்ந்து என்னில் குற்றவுணர்வு ஏற்படுத்திக் கொண்டேயிருந்ததால் என்னை நானே மன அழுத்தத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தேன். நான் நன்றாகத்தானிருக்கிறேன் என்று ஒருபோதும் உணர்ந்ததே இல்லை.
ஏசா 53:11 லே, இயேசு நம் பாவங்களுக்காக மரித்த போது, குற்றவுணர்வையும் சுமந்தார். இந்த பயங்கரமான ஆக்கினை உணர்வினாலே நாம் பாடுபடக் கூடாதென்பதற்காகவே அவர் அந்த கிரயத்தை செலுத்தும் அளவுக்கு நம்மை நேசித்தார். நாம் தேவனிடம் சென்று அவர் நம்மை மன்னிக்கும் படி உண்மையாகவே கேட்போமேயென்றால், அவர் மன்னிப்பார். எனவே ஆக்கினையுணர்வோடு வாழ்வதற்கு எந்த காரணமும் இல்லை.
தேவன் உங்களை நேசிக்கின்றார், நீங்கள் அதை நம்ப வேண்டும் என்றும், எல்லா காலத்திலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறார். நீங்கள் குற்றவுணர்வினின்றும், ஆக்கினை உணர்வினின்றும் விடுபட்டு வாழ வேண்டுமென்று விரும்புகிறார். தேவன், நீங்கள் போதுமானவராகவே இருக்கிறீர்கள் என்கிறார். இன்றே அதை ஏற்றுக் கொண்டு, வெற்றியான ஒரு வாழ்க்கையை வாழுங்கள்.
ஜெபம்
தேவனே, உம்முடைய குமாரன் என் குற்றத்தையும், தண்டனையையும் ஏற்றுக் கொண்டார். கிறிஸ்துவுக்குள்ளாக நான் போதுமானவளாக இருக்கிறேன். இன்று நான் அதை நம்புகிறேன். குற்றவுணர்வு, ஆக்கினை உணர்வு போன்ற பாரத்தோடு வாழ மறுக்கிறேன். உம்முடைய மன்னிப்பை கேட்கிறேன். என் பாவங்களுக்கான உம்முடைய மன்னிப்பை பெற்றுக் கொள்கிறேன்.