கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. (ரோமர் 8:2)
மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து, கடவுளோடு ஐக்கியப்பட முயலும்போது நாம் பரிதாபமாகத் தோல்வி அடைகிறோம், எப்போதும் தோற்கடிக்கப்பட்டதாக உணர்கிறோம். இயேசு நமக்காக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். நம்முடைய பாவத்திற்காகவும், அநீதிக்காகவும் நாம் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய கடனை, அவர் அடைத்தார். நம்முடைய சொந்த கிரியைகள் மூலம் அல்லாமல், அவர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனை அணுகுவதற்கான வழியை அவர் திறந்து வைத்தார்.
நாம் அவரை நேசித்தால் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்போம் என்று இயேசு கூறினார் (யோவான் 14:15 ஐப் பார்க்கவும்). அவற்றையெல்லாம் வெறுமனே வைத்துக் கொண்டிருந்தால் அவர் நம்மை நேசிப்பார் என்று சொல்லவில்லை. தேவன் நம்மை நேசிக்கிறார், மேலும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் விருப்பத்துடன் செய்வதன் மூலம், அவருடைய அன்பிற்கு நாம் பதிலளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் தவறு செய்யும் போது, உடனடியாகவும், முழுமையாகவும் மன்னிக்கப்பட முடியும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
பழைய உடன்படிக்கையின் கீழ், பாவம் ஆவிக்குறிய மரணத்தை உருவாக்கியது. ஆனால் நாம் இப்போது வாழும் அன்பின் சட்டம், நம்மில் ஜீவனை உருவாக்குகிறது. கடவுளின் அன்பு வியக்கத்தக்கது மற்றும் எல்லா நேரத்திலும் நாம் முழுமையாகச் செயல்படுவதற்கான அழுத்தத்தில் இருக்க வேண்டியதில்லை என்பதை உணரச் செய்கிறது. அவருடைய பிரசன்னத்தில் இளைப்பாறவும், அவருடைய சத்தத்தைக் கேட்கவும் உதவுகிறது.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: சிலுவையில் இயேசு மரித்ததின் மூலம், நீங்கள் கடவுளுடன் நெருக்கமான உறவை அனுபவிக்க முடியும்.