“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.” – 3 யோவாண் 1:2
உங்களுடைய முழு ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் -கடவுளுக்கு மிகவும் மதிப்பு மிக்கது மற்றும் அவருடைய திட்டத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அவர் ஒவ்வொரு பகுதியையும் பராமரிக்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் செய்வது போதுமானதாக இல்லாமலிருக்கலாம். கடவுளால் மட்டுமே செய்யக்கூடியதை அவர் தாமே செய்ய நாம் அவரை நம்ப வேண்டும்.
1980 களின் பிற்பகுதியில் நான் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த போது, எனக்கு தேவைப்பட்டது போல், உங்களுக்கு சரீரப்பிரகாரமான சுகம் தேவைப்படலாம். அல்லது நான் என் குழந்தைப் பருவத்திலே பல ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அனுபவித்ததைப் போல உங்களுக்கும் மனரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ சுகம் தேவைப்படலாம். அது எதுவாக இருந்தாலும், கடவுளுடைய வார்த்தை நீங்களும் நானும் நம்முடைய ஒவ்வொரு பகுதியிலும் ஆரோக்கியத்தை அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று நமக்கு உறுதிபடுத்துகிறது.
நீங்களும் நானும் எந்த பகுதியிலாவது நோய்வாய்ப் பட்டு, ஆரோக்கியமற்றவர்களாக இருக்கும்போது, கடவுள் நம்மைச் செய்ய அழைத்த காரியங்களைச் செய்வதிலிருந்தும், அவர் நமக்குக் கொடுத்த வாழ்க்கையை அனுபவிப்பதிலிருந்தும் இது நம்மைத் தடுக்கிறது. கடவுள் உங்களுக்காக திட்டமிடப்பட்ட ஒரு சிறந்த எதிர்காலம் உள்ளது. மேலும் அவர் நம்மை செய்யும் படி அழைத்ததை செய்ய, நாம் ஆயத்தமாயிருப்பதற்கு, சரீரம், ஆத்துமா மற்றும் ஆவியிலே நாம் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியமானதாகும். இன்று அவருடைய குணப்படுத்தும் வல்லமைக்காக ஜெபியுங்கள்.
ஜெபம்
தேவனே, நீர் என் ஒவ்வொரு பகுதியையும் கவனித்துக் கொள்வதற்காய் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சேதமடைந்த என் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும், உம்முடைய அற்புதமான குணப்படுத்தும் வல்லமையை நான் பெற்றுக் கொள்கிறேன்.