ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63)
சில சமயங்களில் நம்முடைய சொந்த மனம், விருப்பங்கள் அல்லது உணர்ச்சிகள் கடவுளுடைய சத்தத்தைக் கேட்கும் திறனில் தலையிடுகின்றன. நாம் கடவுளிடமிருந்து கேட்கவும், கீழ்ப்படியவும் முயற்சிக்கும் போது, எதிர்மறையான எண்ணங்கள், நாம் விட்டு விட நினைக்கும் அளவுக்கு நம்மைத் தாக்கும். ஆனால் நாம் நம் மனதை அமைதிப்படுத்தி, நம் இருதயத்தில் இருப்பதைப் பார்த்தால், கடவுள், தாம் பேசுவதை உறுதிப்படுத்துவார். பரிசுத்த ஆவியானவர் வசிக்கும் நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து சமாதானம் மற்றும் நம்பிக்கையுடன் அவரது பதில் எழுவதை நாம் உணர்வோம்.
ஒரு முறை நான் ஒரு கூட்டத்தை நடத்தி முடித்தேன், வருபவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று நான் மிகவும் கடினமாக உழைத்தேன். எல்லோரும் அந்தக் கூட்டத்தில் நன்றாக உணர்ந்த்து போல் தோன்றினாலும், “யாரும் ஆசீர்வதிக்கப்படவில்லை, வர வேண்டும் என்று விருப்பப் பட்டவர்கள் கூட வரவில்லை” என்று என் மனதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
நான் தோல்வியடைந்ததாய் உணர்ந்தேன், அது கடவுளின் சித்தம் அல்ல என்று எனக்குத் தெரியும். அதனால் நான் அமைதியாக இருந்தேன். பரிசுத்த ஆவியானவர் என்னிடம் என்ன சொல்வார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். உடனே, அமைதியான, மெல்லிய குரல், என் உள்ளத்தில் இவ்வாறு சொல்வதைக் கேட்டேன், “மக்கள் இங்கே வர விரும்பவில்லை என்றால், அவர்கள் வந்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை அனுபவிக்கவில்லை என்றால், பலர் வெளியேறியிருப்பார்கள். நான் உனக்குச் செய்தியைக் கொடுத்தேன், நான் யாருக்கும் கெட்ட விஷயங்களைப் பிரசங்கிக்க மாட்டேன். எனவே உன் உழைப்பின் மகிழ்ச்சியைத் திருட சாத்தானை அனுமதிக்காதே” என்றார். நான் அதற்கு செவிசாய்க்காமல் இருந்திருந்தால், நான் தொடர்ந்து பரிதாபமாக இருந்திருப்பேன். ஆனால் கடவுளின் வார்த்தை எனக்கு உயிர் கொடுத்தது.
நாம் கடவுளிடமிருந்து, நம் ஆவியின் மூலம் கேட்கிறோம், நம் மனதில் அல்ல. அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடவுள் உங்களிடம் உண்மையிலேயே என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க எப்போதும் நேரம் ஒதுக்குங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளுடைய வார்த்தை எப்போதும் உயிர்ப்பிக்கிறது.