
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். (மத்தேயு 7:20)
உங்கள் சொந்த கனியையும் மற்றவர்கள், பெற்றிருக்கும் கனியையும் ஆராய நான் உங்களை ஊக்குவிக்கிறேன். மற்றவர்களை மதிப்பிடுவதற்கும், விமர்சிப்பதற்கும் அவர்களைப் பரிசோதிக்காதீர்கள். ஆனால் அவர்கள் யார் என்று சொல்கிறார்களோ அப்படி இருக்கிறார்களா என்பதைத் தீர்மானியுங்கள். இதுவே நாம் முயற்சி செய்யும் அல்லது “ஆவிகளை சோதித்து” பிரச்சனையிலிருந்து விலகி இருக்க ஒரு வழி. நம்மை ஏமாற்றிய ஒருவரால் காயப்படும், வேதனையான அனுபவத்தை நம்மில் பெரும்பாலோர் அனுபவித்திருக்கிறோம். அந்த நபரை நாம் அறிவோம் என்று நினைத்தோம், ஆனால் அவர் அல்லது அவள் அப்படியில்லை என்பதைப் பின்னர் கண்டறிந்திருப்போம். இந்த அனுபவங்களிலிருந்து, நாம் மக்கள் சொல்வதைக் கண்டு அதனால் கவரப்படாமல், அவர்கள் காண்பிக்கும் கனிகளைக் கவனிக்க வேண்டும். ஒரு நபர் மதத்தின் மீது மிகுந்த பற்று உள்ளவராகத் தோன்றலாம் மற்றும் வேதத்தின் முழு அத்தியாயங்களையும் மேற்கோள் காட்டலாம், ஆனால் அவர் மக்களிடம் முரட்டுத்தனமாகவும், பேராசை கொண்டவராகவும், சுயநலமாகவும் இருந்தால், அவர்கள் தங்களைக் காண்பிப்பது போல் இல்லை.
உண்மையான கிறிஸ்தவனாக இருப்பது எனக்கு மிகவும் முக்கியம். நான் என்னவாக இருக்கிறேன் என்று கூறுவதற்கேற்ற கனியை நான் கொண்டிருக்க விரும்புகிறேன். நீங்களும் அவ்வாறே உணருவீர்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனது சொந்த வாழ்க்கையில் கனியை தினமும் பார்க்க விரும்புகிறேன். நான் என் சொந்த வாழ்க்கையில் கனியைப் பார்க்க விரும்பவில்லை என்றால், மற்றவர்களின் கனியை மதிப்பிடுவதில் அர்த்தமில்லை. நான் பொறுமையாக இருக்கிறேனா? நான் தாராளமாக உள்ளேனா? நான் உண்மையில் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொண்டிருக்கிறேனா? அவர்களுக்கு உதவுவதற்காக தியாகம் செய்யத் தயாரா? பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நான் உடனடியாகக் கீழ்ப்படிகிறேனா? நம் வாழ்வின் கனியை ஆராய நேரம் ஒதுக்காவிட்டால், நாம் நினைக்கிற படி இல்லாமல் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வோம்.
தாவீது தன்னை பரிசோதிக்கும்படி கடவுளிடம் கேட்டார். மேலும் பவுல் கொரிந்தியர்களிடம், விசுவாசத்தைப் பற்றிக்கொண்டு, அதன் சரியான கனியைக் கொடுக்கிறார்களா என்பதைப் பார்க்க, தங்களைத் தாங்களே ஆராய்ந்து, சோதித்து, மதிப்பீடு செய்யச் சொன்னார் (சங்கீதம் 26:2; 2 கொரிந்தியர் 13:5-6). நம் வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, முழு மரமும் நோயுறாதபடி கெட்ட கனிகளைக் கத்தரிக்குமாறு கடவுளிடம் வேண்டுவோம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் வாழ்க்கையின் பலனை ஆராய தினமும் நேரம் ஒதுக்குங்கள்!