கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. (சங்கீதம் 85:8)
தேவன் பேசும்போது, நாம் அவரிடமிருந்து கேட்கும் செய்தி உண்மையிலேயே அவரிடமிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்த அவர் நமக்கு ஆழ்ந்த சமாதானத்தின் உணர்வைத் தருகிறார். அவர் நம்மைக் கண்டித்துப் பேசினாலும், அவருடைய சத்திய ஆவி நம் ஆத்துமாவில் ஒரு சமாதானத்தையும் ஆறுதலையும் விட்டுச் செல்கிறது.
நம் எதிரி, ஏமாற்றுபவன் நம்மிடம் பேசினால், அவனால் சமாதானம் செய்ய முடியாது. நம்முடைய சொந்த பகுத்தறிவைக் கொண்டு விஷயங்களைத் தீர்க்க முயற்சிக்கும் போது, நாம் சமாதானத்தைப் பெற முடியாது, ஏனென்றால் “மாம்ச சிந்தை [பரிசுத்த ஆவி இல்லாத உணர்வு மற்றும் பகுத்தறிவு] மரணம் [இங்கும் மற்றும் மறுமையிலும் பாவத்தால் எழும் அனைத்து துன்பங்களையும் உள்ளடக்கிய மரணம்]. ஆனால் [பரிசுத்த] ஆவியின் சிந்தையோ ஜீவனும் [ஆத்துமா] சமாதானமுமாம் [இப்போது மற்றும் என்றென்றும்]” (ரோமர் 8:6).
தேவன் பேசுவதை நீங்கள் கேட்கும் போதெல்லாம் அல்லது அவர் கூறியதாக நீங்கள் நம்பும் விஷயத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் போதெல்லாம், சமாதானத்தின் அளவைப் பயன்படுத்துங்கள். நீங்கள் கேட்ட வழிகாட்டுதலில் சமாதானம் இல்லாவிட்டால், அதைத் தொடர வேண்டாம். அதைப் பற்றி உங்களுக்கு ஏன் சமாதானம் இல்லை என்பதை நீங்கள் மற்றவர்களுக்கு விளக்க வேண்டியதில்லை; அது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். நீங்கள் எளிமையாகச் சொல்லலாம், “இப்போது இதைப் பற்றி எனக்கு சமாதானம் இல்லை; எனவே, நான் அதை முன்னெடுத்துச் செல்வது புத்திசாலித்தனம் அல்ல” என்று.
தேவன் உங்களுக்கு அறிவுறுத்தியதைச் செய்வதற்கு, சமாதானம் உங்கள் ஆத்துமாவை நிரப்பும் வரை காத்திருங்கள். சமாதானம் என்பது நீங்கள் உண்மையிலேயே கடவுளிடம் இருந்து கேட்கிறீர்கள் என்பதையும், நடவடிக்கை எடுப்பதற்கு உங்கள் நேரம் சரியானது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. சமாதானம் நமக்கு நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தருகிறது. இது கடவுளுடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு உதவுகிறது.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் செயல்படுவதற்கு முன் சமாதானத்திற்காக காத்திருங்கள்.