“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.” – எரே 1:5
தேவன் உங்களைப் பற்றி ஏமாற்றமடைந்திருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறதா? நானும், அவர் என்னிடம் ஒரு நாள் ‘ஜாய்ஸ், நீ எனக்கு ஆச்சரியமில்லை என்று தெரியுமா? உன்னை நான் தெரிந்து கொண்ட போதே, எதைத் தெரிந்து கொள்கிறேன் என்பதை அறிந்து தான் தெரிந்து கொண்டேன்’ என்று சொல்லும் வரை நானும் அப்படித்தான் உணர்ந்து கொண்டிருந்தேன்.
யோசித்துப் பாருங்கள்! முடிவை தேவன் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருக்கிறார். நம் வாழ்னாள் முழுவதும் அவருடைய புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது. நாம் எடுக்கப் போகும் எந்தவொரு தீர்மாணமும், நல்லதோ, தீயதோ, நாம் இந்த உலகில் பிறக்கும் முன்பாகவே தேவன் அதைப் பற்றி அறிந்திருக்கிறார். இன்று நாம் சொல்லாத ஒவ்வொரு வார்த்தையையும் அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார் – ஒரு வருடத்திற்கு பின் நாம் சொல்வதையும் கூட அறிந்திருக்கிறார்.
சில சமயங்களிலே, தேவன் நம்மீது ஏமாற்றம் அடைந்திருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். ஆம் நாம் தவறுகள் செய்வது உண்மை தான். அதைப் பற்றி நாம் கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது தான். அவற்றை நாம் தீவிரமாக கண்டு கொள்ள வேண்டும். ஆனாலும் நம் தவறுகளில் கூட தேவன் நம்மீது நம்பிக்கையாய் இருக்கிறார். நாம் அவருடன் நெருக்கமாக இருந்தால் நம்மை அவரால் மாற்றக்கூடும் என்பதையும் அறிந்திருக்கிறார்.
தேவன் ஏமாற்றமடைந்தவராக இருப்பதில்லை. நம்மைப் பொறுத்தவரை அவர் முழு நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார்! நாம் நம்மை நம்புவதை விட அவர் நம்மை முழுமையாக நம்புகிறார்!
ஜெபம்
தேவனே, எனக்காக நீர் கொண்டிருக்கும் நம்பிக்கை என்னை அதிகமாக உற்சாகப்ப்டுத்துகிறதாகவும், என்னை தூண்டி எழுப்பக்கூடியதாகவும் இருக்கிறது. என்னை நானே நம்பாமலிருக்கும் போது நீர் என்னை நம்புகிறீர் என்று அறிந்திருக்கிறேன். அது, என் தவறுகளை நான் மேற்கொண்டு உம்மைப் பின்பற்ற எனக்கு பெலனளிக்கிறது.