
“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.” – மாற்கு 12:31
உங்களையே உங்களுக்கு பிடிக்காதபோது வாழ்க்கையை அனுபவிப்பது கடினம். தங்களையே ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் சமாதானமாக இருக்க கற்றுக் கொள்ளாத நபர்கள், மற்றவர்களுடன் பழகுவதற்கும், சமாதானமாக இருக்கவும் அதிக சிரமப்படுகிறார்கள்.
நான் தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக மக்களுடன் பழகுவதில் சிரமப்பட்டேன். பின்னர் நான், தேவனுடைய வார்த்தையின் மூலம், மற்றவர்களுடனான எனது சிரமம் உண்மையில் என்னுடனான எனது சிரமங்களில் “வேரூன்றியிருக்கிறது” என்பதை நான் உணரும் வரை, கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன்!
ஒரு நல்ல மரம் நல்ல கனியைத் தரும் என்றும், கெட்ட மரம் கெட்ட கனியைத் தரும் என்றும் வேதம் கூறுகிறது. அதேபோல், நம் வாழ்வின் கனியும், நமக்குள் இருக்கும் “வேரிலிருந்து” வருகிறது. நீங்கள் அவமானம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, நிராகரிப்பு, அன்பின்மை மற்றும் ஏற்றுக் கொள்ளல் இல்லாமை போன்றவற்றில் வேரூன்றியிருந்தால், உங்கள் உறவின் கனி பாதிக்கப்படும். இருப்பினும், கடவுளின் நிபந்தனையற்ற அன்பை நீங்கள் பெற்றுக் கொண்டு, உங்களையும், மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், இறுதியில் இந்த புதிய வேர்கள் நல்ல பலனைத் தரும், மேலும் உங்கள் உறவுகள் செழித்து வளரும்.
உங்கள் வேர்கள் எதில் நடப்படுகின்றன? இன்று உங்கள் இருதயத்தை ஆராய்ந்து, கடவுள் தம்முடைய அன்பின் நிலத்திலே உங்களை உறுதியாக நடும்படி ஜெபியுங்கள். எனவே நீங்கள் உங்களை உண்மையாக நேசிக்கலாம். பின்னர் மற்றவர்களை நேசிக்கலாம். இன்று நீங்கள் அவரில் வேரூன்றி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, என் மீதான உம்முடைய அன்பில் நான் வேரூன்ற விரும்புகிறேன். உம்முடைய அன்பு இல்லாமல், என்னை அல்லது மற்றவர்களை என்னால் நேசிக்க முடியாது, எனவே இன்று அதை நான் பெற்றுக் கொள்கிறேன்.