“நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.” – யாக் 1:4
நீங்களும் நானும் தேவனிடம் ‘என்னை மாற்றும்’ என்று சொல்லும் போது நாம் என்ன சொல்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் அடைய வேண்டிய அனைத்து மாற்றங்களும் ஒரே இரவில் நடைபெற்று விடாது. மாறாக தேவன் என்ன செய்யப் போகிறாரென்றால், நமக்கு சந்தர்ப்பங்களைக் கொடுப்பார், எதிர்ப்புகளின் மூலம் வளர்ந்து மாற்றமடையச் செய்வார்.
யாக் 1 ல் நாம் மாறிக் கொண்டிருக்கும் போதும், எதிர்ப்புகளை எதிர் நோக்கும் போதும் பொறுமையாக இருப்பது எவ்வளவு முக்கியமானது என்று சொல்கிறது. பொறுமையென்பது ஆவியின் கனிகளில் ஒன்றாகும். அந்தக் கனி சோதனையில் தான் வளர்கிறது. அது நமக்கு தேவையான ஒன்று. நாம் அதைப் பெற்றுக் கொண்டிருக்கும் போது, பரிபூரணராகவும், முழுமையானவர்களாகவும் எந்த குறையும் இன்றியும் இருக்கிறோமென்று வேதம் சொல்கிறது. ஆனாலும் அதைப் பெற்றுக் கொள்ள வேறு எந்த விதமான வழியும் இல்லை.
நாம் உண்மையாலுமே தேவனை சேவித்து, இந்த உலகிலே வித்தியாசத்தை ஏற்படுத்தும் வெற்றியுள்ள கிறிஸ்தவராக இருக்க விரும்புவோமேயென்றால், சில சவாலான காரியங்களினூடே செல்ல வேண்டியிருக்கும். பிசாசு எந்த சந்தர்ப்பத்திலும் உங்களை உற்சாகமிழக்க செய்ய முயற்சிப்பான், ஆனால் தேவன் உங்கள் எதிரியை விடவும் பெரியவர். எவ்விதமான சவால்களினூடே சென்றாலும் வெற்றிகரமாக உங்களை வெளியே கொண்டு வருவார்.
எனவே, இன்று எதிர்ப்புகள் இருந்தாலும், தேவன் உங்கள் மூலமாக கிரியை செய்ய அனுமதியுங்கள். உங்களுடைய பொறுமை வளர்கையிலே நீங்கள் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கைக்குள்ளாக செல்வீர்கள்.
ஜெபம்
தேவனே, நீர் என்னை மாற்ற விரும்புகிறேன். அப்படியென்றால் நான் சவால்களினூடே செல்ல வேண்டும். அப்படி நான் சோதனைகளினூடே செல்லும் போது பொறுமையாக இருந்து கிறிஸ்துவுக்குள் முழுமையாக வளர, அதை சகித்துக் கொண்டு நிலையாயிருக்க உம்முடைய பெலனை தருவீராக.