
“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” – அப்போஸ்தலர் 1:8
நான் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவளாக சபையிலே அதிக ஈடுபாட்டுடன் இருந்தேன். ஆனால் என் பிரச்சினைகளில் வெற்றி பெறவில்லை என்பதை நினைவில் கொண்டிருக்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவரைப் போல செயல்பட்டு, எல்லாவற்றையும் சரியாக செய்தால், மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் சரியானதைச் செய்வது மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை; எனக்குள்ளே ஒரு மாற்றம் தேவைப்பட்டது.
அப்போஸ்தலர் 1:8, தேவனுடைய சாட்சிகளாக இருப்பதற்கு அவரது வல்லமையைப் பெறுவதைப் பற்றி பேசுகிறது. அது சாட்சி சொல்வதற்கு என்று சொல்லவில்லை, சாட்சியாக இருப்பதற்கு என்று சொல்வதை கவனியுங்கள். இருப்பதை விட செய்வது வித்தியாசமான காரியம். நான் என்னுடைய வெளியரங்கமான வாழ்வை மெருகூட்டினேன், ஆனால் என் உள்ளான வாழ்க்கை சிதைந்திருந்தது. அடிக்கடி உள்ளிருந்த குழப்பம் வெடித்தது. அப்போது எல்லோருக்கும், நான் தோன்றியது போல் இல்லை என்பதை பார்க்க முடிந்தது.
அதிர்ஷ்டவசமாக, நான் என் வாழ்க்கையில் தேவன் அசைவாட வேண்டிய நிர்பந்தமான இடத்திற்கு வந்தேன். அவருடனான எனது உறவில், நான் அனுபவித்ததை விட இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்தேன். அவருடைய உதவிக்காக ஜெபத்தில் நான் அவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் என் வாழ்க்கையை ஒரு வல்லமையான வழியில் தொட்டார். பரிசுத்த ஆவி ஊற்றப்பட்ட போது, முன்பு இல்லாத அளவுக்கு கடவுள் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் உண்மையான அன்பு எனக்குள் ஏற்பட்டது. நான் நடித்துக் கொண்டிருக்கவில்லை.
இதே பரிசுத்த ஆவியின் வல்லமையை பெற நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அவர் உங்களை “செய்வதிலிருந்து” “இருப்பதற்கு” அழைத்துச் செல்லட்டும்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய வல்லமையை எனக்குக் கொடும், அதனால் நான் “செய்வதிலிருந்து” “இருப்பதற்கு” செல்ல முடியும். நான் யாராக இருக்கிறேனோ, அப்படியாக உம்மை நேசிக்கவும் பின்பற்றவும் விரும்புகிறேன்.