
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். (2 தீமோத்தேயு 1:7)
ஆவிக்குரிய விஷயங்களில், ஒன்று நாம் முன்னோக்கி நகர்கிறோம் அல்லது பின்னோக்கி நழுவ ஆரம்பிக்கிறோம். நாம் வளர்கிறோம் அல்லது மரித்துக் கொண்டிருக்கிறோம். செயலற்ற அல்லது நடுநிலையான கிறிஸ்தவம் என்று எதுவும் இல்லை. நாம் நமது கிறிஸ்தவ நடையை நிறுத்தி வைக்கவோ அல்லது சேர்த்து வைக்கவோ முடியாது. தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது அவசியம். அதனால்தான், பவுல் தீமோத்தேயுவிடம், தனக்குள் இருக்கும் கடவுளின் வரத்தை தூண்டி விடவும், அவனது இருதயத்தில் கடவுளுக்கான நெருப்பை மீண்டும் மூட்டவும் அறிவுறுத்தினார் (பார்க்க 2 தீமோத்தேயு 1:6).
தெளிவாகவே, தீமோத்தேயுவுக்கு இந்த ஊக்கம் தேவைப்பட்டது. இன்றைய வசனத்தை வைத்துப் பார்த்தால், அவர் பயத்துடன் போராடியிருக்க வேண்டும். எந்த நேரத்திலும், பயம் நம்மைப் பிடிக்க அனுமதிக்கும் போது, செயலில் இறங்கி ஒன்றை செய்வதற்கு பதிலாக அசையாமல் இருக்கிறோம். அச்சம் நம்மை ஒரே இடத்தில் உறைய வைக்கிறது; அது முன்னேற்றத்தைத் தடுக்கிறது.
ஒருவேளை தீமோத்தேயு பயந்திருக்கலாம். ஏனென்றால் அவருடைய நாட்களில் கிறிஸ்தவர்கள் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது வழிகாட்டியான பவுல் சிறையில் தள்ளப்பட்டார். அவருக்கும் அதே போல் நடக்குமோ என்று அவர் யோசித்திருக்கலாம். ஆயினும் கூட, தன்னைத் தூண்டி விடவும், தனக்கு நியமிக்கப்பட்ட பாதைக்குத் திரும்பவும், அவரது வாழ்க்கையின் அழைப்புக்கு உண்மையாக இருக்கவும், கடவுள் அவருக்கு “பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை” மாறாக வல்லமை, அன்பு, மற்றும் நல்ல மனதைக் கொடுத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவும் பவுல் அவருக்கு வலியுறுத்தினார்.
நாம், பரிசுத்த ஆவியானவரின் முழுமையைப் பெறும்போது இதைத்தான் நாம் பெறுகிறோம்—வல்லமை, அன்பு மற்றும் நல்ல மனது. நீங்கள் பயப்பட ஆசைப்படும் போது, இந்த உண்மையை நினைவில் கொள்ளுங்கள். கடவுளுடன் தனியாக இருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் நிரப்பட்டும். அதனால் நீங்கள் முன்னேறலாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று நீங்கள் இயேசுவோடு ஐக்கியமாக இருங்கள், உங்கள் பிரச்சனைகளுடன் அல்ல; அவரைப் பற்றி சிந்தியுங்கள், அவைகளைப் பற்றி அல்ல.