
அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். (1 சாமுவேல் 10:6)
கடவுளின் சத்தத்தைக் கேட்க முடிவது, அவரை அறிந்துகொள்வதன் மற்றும் அவருடைய ஆவியால் நிரப்பப்படுவதன் ஒரு முக்கியமான விளைவாகும். ஆனால் அது ஆவியால் நிரப்பப்பட்ட வாழ்க்கையின் ஒரே ஆதாரம் அல்ல. ஒரு நபருக்குள், பரிசுத்த ஆவியின் வல்லமைக்கு மற்றொரு எளிய ஆனால் சக்திவாய்ந்த ஆதாரம், மாற்றப்பட்ட வாழ்க்கை.
இயேசு விசாரணை செய்யப்பட்ட போது, பேதுரு, யூதர்களுக்கு பயந்ததால் மூன்று முறை அவரை மறுதலித்தார் (லூக்கா 22:56-62 பார்க்கவும்); ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பிறகு, அவர் பயப்படவில்லை. நின்று, மிகவும் தைரியமாக செய்தியைப் பிரசங்கித்தார். பேதுருவின் பிரசங்கத்தின் விளைவு என்னவென்றால், அந்த நாளில் மூவாயிரம் ஆத்துமாக்கள் கடவுளுடைய ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 2:14-41 ஐப் பார்க்கவும்). பரிசுத்த ஆவியின் முழுமை பேதுருவை மாற்றியது; அது அவரை வேறொரு மனிதனாக மாற்றியது-மிகவும் தைரியமான, பயமே இல்லாத ஒருவன்.
அன்று துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்தவர், பேதுரு மட்டுமல்ல. மீதமுள்ள பதினொரு சீடர்களும் அவ்வாறே செய்தனர். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர்கள் யூதர்களுக்குப் பயந்து, அனைவரும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தனர் (யோவான் 20:19-22 ஐப் பார்க்கவும்). திடீரென்று, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட பிறகு, அவர்கள் அனைவரும் பயமற்றவர்களாகவும், தைரியமானவர்களாகவும் ஆனார்கள்.
பரிசுத்த ஆவியின் வல்லமை பல ஆண்டுகளாக எண்ணற்ற மக்களை மாற்றியுள்ளது. இன்றைய வசனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி அது சவுலை மாற்றியது. பேதுருவையும் மற்ற சீடர்களையும் மாற்றியது. அது என்னை மாற்றி விட்டது; மேலும் உலகெங்கிலும், ஆர்வமாய் அவரைத் தேடுபவர்களை, மாற்றுவதைத் தொடர்கிறது. நீங்கள் மாற்றப்பட வேண்டுமா? இன்று உங்களை நிரப்ப, பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: மாற்றுவதற்கு, உங்களுக்கு பரிசுத்த ஆவியின் வல்லமை தேவை.