
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். (எபேசியர் 4:15)
நீங்களும் நானும் பொய்யான வாழ்க்கை வாழ்பவர்களால் நிரம்பிய ஒரு உலகில் வாழ்கிறோம். பாசாங்குகளின் முகமூடிகளை அணிந்து கொண்டு, மற்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்பாத விஷயங்களை மறைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு. உண்மையாக நடக்க, மக்களுக்குக் கற்பிக்கப்படாததே இதற்குக் காரணம். விசுவாசிகளாக, நமக்குள் பரிசுத்த ஆவியானவர் வாழ்கிறார்; அவர் சத்தியத்தின் ஆவியானவர், அவர் நம்மிடம் உண்மையைப் பேசுகிறார்.
சில நேரங்களில் சாத்தான் நம்மை ஏமாற்றுகிறான். ஆனால் மற்ற நேரங்களில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாழ்க்கையை உண்மையாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியின் உதவியுடன் பிரச்சினைகளைக் கையாள்வதற்குப் பதிலாக, நமக்கு வசதியாக இருக்கும் ஒரு வாழ்க்கையை நாம் உருவாக்குகிறோம்.
பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசுகிறார் மற்றும் என் வாழ்க்கையில் அடிக்கடி வரும் பிரச்சினைகளுக்கு பதில் கொடுக்கிறார். மேலும் அவர் என்னை ஒரு கோழையாக அல்ல, ஒரு போராடுபவளாக இருக்கக் கற்றுக் கொடுத்தார். கோழைகள் சத்தியத்திலிருந்து மறைந்து கொள்கிறார்கள்; அவர்கள் அதைக் கண்டு பயப்படுகிறார்கள். உண்மையை கண்டு பயப்பட வேண்டியதில்லை. பரிசுத்த ஆவியானவர் அவர்களை உண்மைக்கு அழைத்துச் செல்வார் என்று இயேசு தம் சீடர்களிடம் கூறினார். ஆனால் அவர்கள் சில விஷயங்களைக் கேட்கத் தயாராக இல்லை என்று அவர்களிடம் சொன்னார் (யோவான் 16:12 ஐப் பார்க்கவும்). அதனால் அவர் அந்த நேரத்தில் அந்த விஷயங்களை வெளிப்படுத்தவில்லை. பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களிடம் உண்மையைப் பேசுவார். ஆனால் நீங்கள் அவற்றைக் கேட்கத் தயாராக இருப்பதை அவர் அறியும் வரை, அவர் உங்களிடம் சில உண்மைகளைப் பேசமாட்டார்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சத்திய ஆவியை வரவேற்கும் அளவுக்கு நீங்கள் தைரியமாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி அவர் உங்களிடம் பேச அனுமதித்தால், நீங்கள் சுதந்திரம் மற்றும் அதிகாரத்தின் மறக்க முடியாத பயணத்தில் இருப்பீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: சத்தியத்திற்கு ஒருபோதும் பயப்படாதீர்கள்.