அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். (டேனியல் 2:21)
பல வருடங்களுக்கு முன்பு, ஒரு சபை ஊழியராக ஒரு நல்ல வேலையை அனுபவித்தேன். எனக்கு ஒரு செழிப்பான ஊழியம், வழக்கமான சம்பளம், மற்றும் நான் விரும்பியதைச் செய்ய நிறைய வாய்ப்புகள் இருந்தன. அந்த வேலையை விட்டு விட்டு என் ஊழியத்தை “வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குக்கு” எடுத்துச் செல்வதைப் பற்றி தேவன் என்னிடம் பேசிய ஒரு சமயம் வந்தது. இவ்வாறு அவர் சொல்வதை நான் கேட்டேன், “உன் வாழ்வில் இந்தப் பருவம் நிறைவுற்றது; இந்த இடத்தில் நான் உன்னுடன் இதை முடித்து விட்டேன்”.
என் இருதயத்தில், தேவன் பேசியதை நான் அறிந்தேன். இருந்த போதிலும், என்னுடைய சொந்த ஊழியத்தைத் தொடங்குவதில் எனக்கு உற்சாகமும் பயமும் கலந்திருந்தது. நான் அதுவரை அறிந்ததைத் தாண்டி முயற்சி செய்ய விரும்பினேன், ஆனால் நான் தவறு செய்து என்னிடமிருப்பதை இழக்க நேரிடும் என்று பயந்தேன். தேவன் என்ன செய்வார் என்று நான் பார்க்க விரும்பினேன், ஆனால் தெரியாத பிரதேசத்திற்குள் இவ்வளவு பெரிய அடி எடுத்து வைக்க நான் பயந்தேன்.
சில சமயங்களில் தேவன் எதையாவது ஒன்றை முடித்து விடுவார், ஆனால் நாம் அதையே பற்றிக் கொண்டிருப்போம். என் ஆவி வெளியேற விரும்பியது, ஆனால் என் மாம்சம் நிலைத்திருக்க விரும்பியது. கடவுள் என்னை வெளியேற அழைக்கும் போது எனக்கு நிறைய பாதுகாப்பு இருந்தது, நான் அதை விட்டுவிட விரும்பவில்லை. ஆனால், இறுதியில் நான் அவருக்குக் கீழ்ப்படிந்தேன், இன்று நான் உலகம் முழுவதும் ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறேன். தேவன் காரியங்களை மாற்றுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் அப்படி செய்யும் போது, நாம் அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்ற தயாராக இருக்க வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் போது, உங்களை வழிநடத்த கடவுளின் சத்தத்தைக் கேளுங்கள்.