“கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” – மத் 6:27
கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை. அது ஒன்றையும் மாற்றாது. தேவன் ஒருவரே மாற்றக்கூடிய காரியங்களை, நம்மால் எதுவும் செய்ய இயலாத காரியங்களை பற்றி கவலைப்பட்டுக் கொண்டு நேரத்தைத் தான் விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நாம் கவலைப்படுவதால் நம் உயரத்தோடு ஒரு அங்குலத்தைக் கூட கூட்ட இயலாது என்று வேதம் சொல்கிறது, ஆனாலும் நாம் கவலைப்பட்டு கவலைப்பட்டு இன்னும் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். அது நம்மை எங்கும் கொண்டு செல்கிறதில்லை.
நாம் ஒவ்வொரு முறையும் வருத்தம் அடையும் போது அது அதிகப்படியான உணர்ச்சிகளை ஆற்றலை உபயோகித்துக் கொள்கிறது. நம்மை களைப்படையச் செய்கின்றது. நம் ஆரோக்கியத்தை குறைக்கின்றது. நம் சந்தோசத்தை திருடுகின்றது. ஆயினும் ஒரு காரியத்தைக் கூட மாற்றுகிறதில்லை. தேவன் மட்டுமே சரிபடுத்தக்கூடிய காரியங்களை சரிபடுத்த முயற்சி எடுப்பதை விட்டு விட வேண்டும். ஏனென்றால் கைதட்டி அவற்றை ஜெயித்து விட்டேன் என்று ஆரவாரம் செய்யும் ஒரே ஒருவன் பிசாசுதான்.
இயேசு யோவாண் 14:27லே, ‘அமர்ந்திரு’ என்றும் யோவாண் 16:32 லே ‘திடன் கொள்’ என்றும் கூறுகிறார். அப்படி நாம் செய்யும் போது பிசாசை கீழே விழத்தள்ளுகிறோம். எல்லாவற்றையும் உங்களால் சரி செய்ய இயலாது என்று நீங்கள் உணரும் போது அது உங்களை அமைதிப்படுத்துகிறது. தேவனால் கூடும் என்பதை உணரும் போது அது உங்களை திடன் கொள்ள செய்கிறது. எனவே கவலைப்படாதீர். மாறாக அமர்ந்திருந்து, திடன் கொண்டு பிசாசை விரட்டுங்கள்.
ஜெபம்
தேவனே, என் கவலையினால் நான் எதையும் சாதிக்கிறதில்லை. எனவே அதை விட்டு விடுகின்றேன். என்னால் சரிபடுத்த இயலாததை நீர் சரி செய்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீரே என்னை அமைதிப்படுத்தி என்னை திடன் கொள்ள செய்வீராக!