குறுகிய பாதை ஒரு நல்ல இடம்

குறுகிய பாதை ஒரு நல்ல இடம்

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:14)

சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் செய்த ஒரு காரியத்தை இப்போது செய்ய முயற்சித்தால் அது உங்கள் மனசாட்சியை தொந்தரவு செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்திருக்கலாம், ஆனால் அது தவறு என்று கடவுள் இப்போது உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பதால், நீங்கள் அதை செய்ய நினைக்க மாட்டீர்கள்.

தேவன் நம்மிடம் நம் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார், திருத்தங்களைக் கொண்டு வர நம்மில் கிரியை செய்கிறார், பிறகு சிறிது நேரம் இளைப்பாற அனுமதிக்கிறார். நாம் கேட்டுக் கொண்டிருக்கும் வரை, அவர் எப்பொழுதும் நம்மிடம் புதியதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்.

நீங்கள் என்னைப் போலவே இருந்திருப்பீர்களென்றால், ஒரு காலத்தில் பரந்த மற்றும் பொறுப்பற்ற பாதையில் நடந்தீருப்பீர்கள், ஆனால் நீங்கள் இப்போது ஒரு குறுகிய பாதையில் இருக்கிறீர்கள். நான் ஒருமுறை கடவுளிடம் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது, “என் பாதை எல்லா நேரத்திலும் குறுகியது போல் தெரிகிறது.” கடவுள் என்னை வழிநடத்திச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாகி, அதில் எனக்கு இடமில்லை என்பதாக நான் உணர்ந்தேன்! “இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்” என்று பவுல் சொன்னதில் ஆச்சரியமில்லை (கலாத்தியர் 2:20). இயேசு நம்மில் வாழ வரும்போது, அவர் நிரந்தர வசிப்பிடத்தை எடுத்துக் கொண்டு, தம்மை அதிகமாகவும், நம்முடைய பழைய சுயநலம் குறைவாகவும் இருக்கும் வரை மெதுவாக நம் வாழ்வில் தம் பிரசன்னத்தை விரிவுபடுத்துகிறார்.

நீங்கள் ஒரு குறுகிய பாதையில் இருப்பதாக உணர்ந்தால் – நீங்கள் முன்பு செய்ததை உங்களால் செய்ய முடியாதது போல் அல்லது உங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமாக இருப்பது போல் உணர்ந்தால் – உற்சாகப்படுங்கள்; உங்களது பழைய சுயநலம் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது, அதனால் கடவுளின் பிரசன்னம் உங்களுக்குள் அதிகமாக இருக்கும்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளுங்கள், அவை கடவுளுக்கு அதிக இடமளிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon