
“நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.” – லூக்கா 1:79
கடவுள் நமக்கு அளித்த மிக முக்கியமான நன்மைகள் மற்றும் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றுதான் சமாதானம் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், அன்றாட வாழ்க்கையின் மும்முரத்திலும், அது கொண்டு வரும் அழுத்தத்திலும், நாம் பெரும்பாலும் சமாதானத்தைத் தவிர வேறு எல்லாவற்றையும் உணர்கிறோம். ஆனால் அது அப்படி இருக்க தேவையில்லை.
லூக்கா 1:79, நம்மை சமாதான வழியில் நடத்துவதற்காகவே, தேவன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினாரென்று சொல்லுகிறது. விசுவாசிகளாகிய, நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அல்லது நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருந்தாலும், தேவனுடைய இயற்கைக்கு மேலான வல்லமையிலே நடப்பதற்கான அருமையான பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
நான், என் வாழ்க்கையின் முதல் நாற்பது ஆண்டுகள் சமாதானம் இல்லாமல் வாழ்ந்தேன், நான் பரிதாபமாக இருந்தேன். நான் இறுதியாக சமாதானத்திற்காக மிகவும் ஏங்கினேன். அதைப் பெறுவதற்கு தேவையான எந்த மாற்றங்களையும் செய்ய கடவுளுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக, இப்போது நான் எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானமுள்ள வாழ்க்கையை அனுபவிக்கிறேன். என்னால் சமாதான பாதையில் நடக்க முடிகிறது, புயல்கள் இல்லாத போது மட்டுமல்ல, வாழ்க்கையின் புயல்களின் போதும் கூட.
சமாதானத்தைப் பின்தொடர்வதை நீங்கள் முன்னுரிமையாக்கியுள்ளீர்களா? கடவுள் உங்களை அப்படியாக இருக்க விரும்புகிறார். சமாதானத்தில் நடத்தப் பட பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றுங்கள்.
ஜெபம்
தேவனே, எங்கள் கால்களை சமாதானத்திற்குள் “வழிநடத்த” இயேசுவை அனுப்பியதற்காய் நன்றி. என் வாழ்க்கைக்கான மகாப் பெரிய ஆசீர்வாதமான உம்முடைய சமாதானத்தை நான் பெற்றுக் கொள்கிறேன்.