
“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” – ஏசாயா 30:21
பரிசுத்த ஆவியானவர் எப்போதுமே நம்மை வாழ்க்கையினூடாக நடத்திச் செல்கிறார். ஆனால் சில சமயங்களிலே நாம் பெரிதாக தோன்றும் பிரச்சினைகளிலே அதிக கவனம் செலுத்துவதால் அனுதினமும், சிறிய தூண்டுதல்களால் நம்மிடம் எவ்வளவாக பேசுகிறாரென்பதை உணராமலிருக்கிறோம்.
ஒரு நாள் நான் என் வீட்டிற்கு செல்லும் போது, காபி வாங்கி செல்ல நினைத்தேன். அப்போது என் உதவியாளருக்கும் வேண்டுமா என்று கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டது. அவரை நான் அழைத்துக் கேட்ட போது, அவர் சொன்னதாவது, ‘நான் இப்போது தான் ஒரு நல்ல காபி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்’ என்றார்.
பார்த்தீர்களா? தேவன் அவருடைய விருப்பத்தைக் கொடுக்க விரும்பினார். என் மூலமாக கொடுக்க விரும்பினார். நானொரு பெரிய சத்தத்தைக் கேட்கவில்லை, தூதனையும் பார்க்கவில்லை, தரிசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவளுக்கு ஒரு கப் காபி வாங்கி கொடுக்க வேண்டுமென்று தோன்றியது அல்லது ஒரு உள்ளார்ந்த உணர்வு ஏற்பட்டது.
இதே போன்று தான் உங்கள் வாழ்க்கையில் உள்ளவர்களை தேவன் ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவனுடைய சத்தத்திற்கு உங்கள் இருதயம் உணர்வுள்ளதாக இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டுமென்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். சிறிய தூண்டுதல்களைப் பின்பற்றுங்கள். அவர் உங்கள் இருதயத்தில் பேசி நீங்கள் செல்ல வேண்டிய வழியிலே உங்களை நடத்துவார்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய சிறிய தூண்டுதல்களை நான் கேட்கத்தக்கதாக என்னை அமைதிப் படுத்திக் கொள்ள தெரிந்து கொள்கிறேன். பிறரை ஆசீர்வதிக்கும் வழிகளை எனக்கு காட்டுவீராக.