
“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.” – சங்கீதம் 42:5
துக்கத்தை அனுபவிக்கும் மக்கள் பெரும்பாலும் உணர்ச்சி ரீதியாக நிலையற்றவர்களாக இருப்பார்கள். தங்கள் வருத்தத்தை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அவர்கள் கட்டுக்கடங்காமல் அழக்கூடும், மேலும் எதிர்பார்க்காத போது கண்ணீரும், பிற மன உளைச்சல்களும் வந்து போகலாம். குழப்பம், கோபம், பயம், மனச் சோர்வு மற்றும் அதிகப்படியான உணர்ச்சி அலைகள் சாதாரணமாக வெளிப்படும். இது போன்ற காலங்களில், தாவீது ராஜாவைப் பார்ப்பது புத்திசாலித்தனம் என்று நான் நம்புகிறேன்.
சங்கீதம் 42:5-ல், தாவீது மனச்சோர்வடைந்தபோது, அவன் அதை எதிர்த்ததை நாம் காண்கிறோம். அவன் அதில் மூழ்கி விடவில்லை அல்லது விரக்தியின் குழிக்குள் இறங்கவில்லை. அவன் எப்படி உணர்ந்தான் என்பதை விவரிக்கிறான். ஆனால் அவன் தனது உணர்வுகளை சார்ந்து வாழக்கூடாது என்று ஒரு முடிவை எடுத்தான். அவன் தேவனைத் துதித்தான், நம்பினான்.
நம்மில் பெரும்பாலோர் துக்கமான இழப்புகள் ஏற்படும் போது, உணர்ச்சி ரீதியாக கடினமான காலங்களை கடந்து செல்கிறோம், மேலும் துக்கப்படுவதற்கு நமக்கு நேரம் கொடுக்க வேண்டும். நாம் அதனூடாக செல்லும்போது, கடவுள் நம்மை ஆறுதல்படுத்தவும், அதன் மூலம் நமக்குத் தேவையான கிருபையை வழங்கவும் விரும்புகிறார். கடவுள் மீது விசுவாசத்தோடு நடப்பவர்கள், அவர்கள் உள்ளே சென்றதை விட மிகச் சிறப்பாக வெளியே வருவார்கள்.
உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பு காரணமாக இப்போது நீங்கள் வருந்திக் கொண்டிருப்பீர்களென்றால், ஒரு புதிய ஆரம்பம் உங்களுக்கு முன்னால் இருக்கிறது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தாவீதைப் போலவே கடவுளை, துதியுங்கள், நம்புங்கள். சாத்தான் உங்கள் தீமைக்கென்று ஒன்றை செய்யும் போது, தேவன் உங்கள் நன்மைக்காக அதை திருப்ப முடியும்!
ஜெபம்
ஆண்டவரே, நான் துக்கமாகவும், மனச்சோர்விலும் இருக்கும்போது கூட, உம்மைப் புகழ்ந்து நம்புவேன். ரோமர் 8:28 சொல்வது போல், எல்லாவற்றையும் என் நன்மைக்கென்று மாற்றி விடுகிறீர் என்று நம்புகிறேன்.