
அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். (ரோமர் 6:11)
இரட்சிக்கப்படாத மக்கள் ஆவிக்குறிய ரீதியில் செத்தவர்கள். இதன் பொருள், அவர்கள் கடவுளுடன் ஒற்றுமையை அனுபவிக்கவோ அல்லது பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களை உணர்ந்து பின்பற்றவோ முடியாது. இந்த மக்கள் தங்கள் இயல்பு அல்லது சொந்த அறிவை சார்ந்து நிற்பவர்கள்; அவர்கள் வெளிப்பாட்டின் மூலம் வாழும் பாக்கியத்தையும், வல்லமையையும் அனுபவிக்க முடியாது. ஆனால், நாம் மீண்டும் பிறந்து, ஆவிக்குறிய ரீதியில் உயிரோடு இருக்கும்போது, கடவுள் நம்மிடம் பேசவும், தெய்வீக வெளிப்பாட்டுடன் நம்மால் அறிய முடியாத விஷயங்களைக் நமக்கு காட்டவும் முடியும்.
கடந்த காலங்களில், எனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செயல்படுத்துவதற்கான இயல்பான அறிவு இல்லாத போதும் அந்த வேலைகள் மற்றும் பொறுப்பு பதவிகளை நான் வகித்துள்ளேன். ஆனால், நான் தேவனுடன் நெருங்கிய, தனிப்பட்ட உறவைக் கொண்டிருந்தேன், அதனால் அவர் என்னை வழிநடத்தி, நான் முழுமையாகப் பயிற்றுவிக்கப்படாத விஷயங்களைச் செய்ய எனக்கு உதவினார்.
ஒரு ஊழியத்தை எவ்வாறு வழிநடத்துவது அல்லது வெகுஜன தகவல் தொடர்புகளை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதை நான் ஒருபோதும் படித்ததில்லை. ஆனால் ஜாய்ஸ் மேயர் ஊழியத்தில் உள்ள என்னையும் குழுவையும், உலகம் முழுவதிலும் உள்ள வெகுஜன ஊடகங்கள் உட்பட பல்வேறு வழிகளில் நாங்கள் ஊழியம் செய்ய, எங்களுக்கு தேவையான அனைத்தையும் தேவன் ஆயத்தப்படுத்தியுள்ளார். தேவன் எங்களுக்கு, அவரது ஆவியினால், ஒவ்வொரு படியாக எங்களை வழி நடத்துகிறார்- நாங்கள் எடுத்து வைக்கும் விசுவாசத்தின் ஒவ்வொரு அடியிலும், அவர் எங்களுக்கு தொடர்ந்து கற்பித்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறார்.
நீங்கள் அவருடன் ஐக்கியமாக இருந்தால், அவர் உங்களை அழைத்ததைச் செய்ய, உங்களை ஆயத்தப்படுத்துவார். நீங்கள் அவரைத் தேடுவதற்கும் அவருடைய சத்தத்தைக் கேட்பதற்கும் விடாமுயற்சியுடன் இருந்தால், அவர் உங்களை இயற்கைக்கு அப்பாற்பட்டு வழிநடத்துவார். உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய நோக்கங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை அவர் உங்களுக்குக் கற்பிப்பார் – மேலும் நீங்கள் தற்போது செய்யப் பயிற்றுவிக்கப்பட்ட அல்லது கற்பனை செய்யக்கூடிய எதையும் விட அவை மிகப் பெரியதாக இருக்கலாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் உங்களுக்கு தேவையான அனைத்தையும் உங்களுக்கு வழங்குவார்.