“அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.” (லூக்கா 17:5)
அநேக நபர்கள், ஒருவேளை நீங்களும் கூட, “மிகப்பெரிய விசுவாசம்” வேண்டும் என்று ஜெபிக்கலாம், ஆனால் அது ஜெபத்தின் மூலம் மட்டும் வருவதில்லை. தேவன் நம்மிடம் செய்ய சொல்வதற்குக் கீழ்ப்படிந்து அப்படி செய்யும் போது அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மில் கட்டப்படுகிறது. நமக்கு எந்த அனுபவமும் இல்லாத அல்லது முழுமையாக புரிந்து கொள்ளாத காரியங்களைச் செய்யும் படி அவர் நம்மைக் கேட்கலாம், ஆனால் நாம் அப்படி செய்யும் போது, தேவனுடைய உண்மைத்தண்மையை அனுபவிப்போம், நம் விசுவாசம் வளரும்.
தேவன் சில சமயங்களில், மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், விசுவாசமாகிய பரிசைக் கொடுக்கிறார், ஆனால் பொதுவாக விசுவாசம் அனுபவத்தின் மூலம் பெரியதாகிறது. நாம் அதைச் செயல்படுத்தும் போது நம்முடைய விசுவாசம் ஆழமாகவும், வலுவாகவும், அதிகமாகவும் வளர்கிறது.
இன்றைய வசனத்தில், சீஷர்கள் தங்கள் விசுவாசத்தை அதிகரிக்க இயேசுவிடம் கேட்டார்கள். அவர் லூக்கா 17:6 ல் அவர்களிடம், விசுவாசத்தை அதிகரிக்க அவர்கள் தங்கள் விசுவாசத்தில் செயல்பட வேண்டும் என்று பதிலளித்தார். இன்று நமக்கும் அப்படித்தான். அவர் சொன்ன காரியங்களைச் செய்வது, நம்முடைய விசுவாசத்தை நாம் வெளிக்காட்டுவதற்கான ஒரு வழி; விசுவாசத்திற்கு செயல் தேவைப்படுகிறது. நிச்சயமாக, நம் சார்பாகச் செயல்பட, நாம் காத்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்பும் நேரங்கள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் நாம் ஏதாவது ஒன்றை செய்வதன் மூலம் நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். நாம் நம் விசுவாசத்தில் வளர விரும்பினால், நாம் எதிர்பார்ப்புடன் காத்திருக்க அல்லது கடவுளுடைய வார்த்தையின்படி செயல்பட தயாராக இருக்க வேண்டும், ஆனால் நாம் ஒன்றும் செய்யாத போது நம் விசுவாசம் அதிகரிக்காது.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் செயல்படுங்கள்.